பல் சொத்தை மற்றும் பல் அடைத்தல்
சிறிய சொத்தை வலிக்காது, அதனால் பலர் கவனிப்பதில்லை. ஆனால் சொத்தை தானாக மறையாது; சீக்கிரம் கண்டுபிடித்தால் சிகிச்சையும் சிறியதாக இருக்கும்.
சுருக்கமான பதில்
பல் சொத்தை என்பது பல்லின் மேல் அடுக்கைக் கிருமிகள் அரித்து உண்டாக்கும் துளை. அரோராவில் உள்ள Aurora Gateway Dental Care-இல், பல் மருத்துவர் சொத்தைப் பகுதியை அகற்றி, அந்த இடத்தைப் பல் நிறப் பொருள் போன்றவற்றால் அடைப்பார். பெரும்பாலான அடைப்புகள் ஒரே வருகையில், மரத்துப்போகச் செய்யும் ஊசியுடன் (freezing) செய்யப்படுகின்றன. கடைசியாக உங்கள் கடிப்பு சரிபார்க்கப்படும்.

பல் சொத்தை எப்படி உண்டாகிறது?
பல்லின் மேல் ஒட்டியிருக்கும் கிருமிப் படலம் (plaque), நாம் சாப்பிடும் இனிப்பையும் மாவுப் பொருட்களையும் அமிலமாக மாற்றுகிறது. இந்த அமிலம் நாளடைவில் பல்லின் வெளிப்புற எனாமலை மென்மையாக்கித் துளையாக்குகிறது. தேநீரில் சர்க்கரை, இடைவேளையில் இனிப்புப் பலகாரம், அடிக்கடி குளிர்பானம்: இவை சேரும்போது பற்களுக்கு ஓய்வே கிடைப்பதில்லை.
ஆரம்பத்தில் சொத்தை வெள்ளைப் புள்ளியாகவோ பழுப்பு நிறக் கறையாகவோ தெரியலாம். இரண்டு பற்களுக்கு இடையில் இருந்தால் கண்ணுக்கே தெரியாது; எக்ஸ்-ரேயில் மட்டுமே தெரியும். அதனால்தான் வலி இல்லாதபோதும் வழக்கமான பரிசோதனைகள் முக்கியம்.
பல் கூச்சம்: கவனிக்க வேண்டிய அடையாளங்கள்
இனிப்பு, குளிர்ந்த தண்ணீர் அல்லது கடிக்கும்போது ஒரு பல்லில் மட்டும் வரும் பல் கூச்சம் சொத்தையின் அறிகுறியாக இருக்கலாம். ஈறு இறங்குதல், பல் தேய்மானம் போன்ற வேறு காரணங்களாலும் கூச்சம் வரலாம். அதனால் பரிசோதனை முக்கியம்.
- நாக்கால் தொட்டால் துளை அல்லது கரடுமுரடான முனை தெரிகிறது
- இரண்டு பற்களுக்கு இடையில் ஒரே இடத்தில் உணவு சிக்குகிறது
- பழைய அடைப்பு கருத்து, உடைந்து அல்லது தளர்ந்து இருக்கிறது
- வலி இல்லாவிட்டாலும், பரிசோதனையில் சொத்தை கண்டுபிடிக்கப்பட்டது
பல் அடைத்தல் எப்படிச் செய்யப்படுகிறது
முதலில் பல் மருத்துவர் பல்லைப் பார்த்து, தேவைப்பட்டால் டிஜிட்டல் எக்ஸ்-ரே எடுத்து, சொத்தை எவ்வளவு ஆழம் என்று பார்ப்பார். பிறகு அந்தப் பகுதி மரத்துப்போக ஊசி போடப்படும்; முழுமையாக மரத்த பின்பே வேலை தொடங்கும். சொத்தையான பகுதி அகற்றப்பட்டு, அந்த இடம் நீங்களும் பல் மருத்துவரும் தேர்ந்தெடுத்த பொருளால் நிரப்பப்படும். கடைசியாக, நீங்கள் கடிக்கும்போது பல் இயல்பாக இருக்கிறதா என்று சரிபார்த்து உயரமான இடங்களைச் சீராக்குவார்.
சொத்தை மிகப் பெரியதாக இருந்தால், அடைப்புக்குப் பதிலாகக் கிரவுன் (crown, பலர் ‘கேப்’ என்பார்கள்) தேவைப்படலாம். சொத்தை நரம்பு வரை சென்றிருந்தால் ரூட் கேனல் தேவைப்படலாம். எந்த வழி பொருந்தும் என்று விளக்கிய பிறகே முடிவு செய்வீர்கள்.
அடைப்புக்குப் பிறகு
மரத்த உணர்வு போகும் வரை அந்தப் பக்கம் மெல்லாதீர்கள்; கன்னத்தையோ நாக்கையோ கடித்துவிடலாம். சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை குளிருக்குக் கூச்சம் இருக்கலாம். ஓரிரு நாட்களுக்குப் பிறகும் கடிக்கும்போது பல் உயரமாகத் தோன்றினால் அழையுங்கள்; சிறிய சரிசெய்தல் போதுமானதாக இருக்கும். எந்த அடைப்பும் காலப்போக்கில் தேயலாம், அதன் ஓரங்களில் மீண்டும் சொத்தை வரலாம்; அதனால் வழக்கமான பரிசோதனைகள் அவசியம்.
செலவும் கோரிக்கையும்
பல காப்பீட்டுத் திட்டங்களில் அடைப்பு அடிப்படைச் சேவையாகக் கருதப்படுகிறது. CDCP-யும் தகுதியானவர்களுக்கு அடைப்புகளை உள்ளடக்குகிறது. சிகிச்சைக்கு முன் எழுத்தில் செலவு மதிப்பீடு தருவோம்; விரும்பினால் அதை முதலில் உங்கள் காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பலாம். எங்கள் குழு தமிழ் பேசுகிறது. பரிசோதனைக்கு இந்தப் பக்கத்தில் உள்ள படிவத்தில் ‘கிரவுன், பிரிட்ஜ் அல்லது பல் அடைத்தல்’ என்பதைத் தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்.
கேள்விகள்
சொத்தை தானாகச் சரியாகுமா?
துளை உண்டான பிறகு அது தானாக மூடாது. மிக ஆரம்ப நிலையில் உள்ள வெள்ளைப் புள்ளிகள் ஃப்ளூரைடு, நல்ல பல் துலக்குதல் மூலம் வலுப்பெறலாம். எது எந்த நிலை என்று பல் மருத்துவர் சொல்வார்.
எந்தப் பொருளால் அடைப்பார்கள்?
பெரும்பாலும் பல் நிறக் கலவைப் பொருள் (composite) பயன்படுத்தப்படுகிறது. பல்லின் இடம், சொத்தையின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து வேறு பொருட்களும் பரிந்துரைக்கப்படலாம்.
பழைய வெள்ளி நிற அடைப்புகளை மாற்ற வேண்டுமா?
நன்றாக இருக்கும் அடைப்பை வெறுமனே மாற்ற வேண்டியதில்லை. உடைந்திருந்தால், கசிவு இருந்தால் அல்லது அதன் கீழ் சொத்தை வந்திருந்தால் மாற்றுவது பற்றிப் பேசலாம்.
அடைத்த பின் எப்போது சாப்பிடலாம்?
பல பொருட்கள் நீங்கள் கிளம்பும் முன்பே கெட்டியாகிவிடும். ஆனாலும் மரத்த உணர்வு போகும் வரை காத்திருங்கள். உங்கள் பல் மருத்துவர் அன்று தெளிவாகச் சொல்வார்.
குழந்தைகளுக்கும் அடைப்பு செய்வீர்களா?
ஆம். சிறிய அடைப்புகளை எங்கள் பொதுப் பல் மருத்துவர்கள் குழந்தைகளுக்கும் செய்கிறார்கள். பிள்ளை தயாராக இருக்கிறதா என்று பார்த்து, அவசரப்படாமல், ஒவ்வொரு படியையும் விளக்கிச் செய்வோம். பால் பல்லில் உள்ள சொத்தையையும் கவனிக்காமல் விடக்கூடாது.
இது பொதுவான தகவல் மட்டுமே, தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை அல்ல. வலி, வீக்கம் அல்லது காயம் இருந்தால் 289-475-5497 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள். மூச்சுவிடவோ விழுங்கவோ சிரமம் தரும் வீக்கம், அல்லது கடுமையான காயம் இருந்தால்: 911-ஐ அழையுங்கள் அல்லது அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுங்கள்.
வருகைக்குக் கோரிக்கை அனுப்புங்கள்
289-475-5497இந்தப் படிவத்தை அனுப்புங்கள்; நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு நேரத்தை உறுதிசெய்வோம். நீங்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.
676 Wellington Street East, Unit 3
Aurora, ON L4G 0K3